பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது;

ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது. தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
புதிய திட்டம் குறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட் கூறும் போது, ''ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயோ மெட்ரிக் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இந்த திட்டம் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, மின்னணு கல்வி மேலாண்மை, கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ் போன்ற திட்டங் களுக்கு தகவல் தொகுப்பாக பயன்படுத்த எளிதாக இருக்கும்,'' என்றார்.

வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது

. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.