அனுமதியில்லாமல் நீண்ட கால விடுப்பு:அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அனுமதியில்லாமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட நீண்ட கால விடுப்பில் இருந்தால் அந்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியருக்கு விடுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இதை தாண்டி விடுப்பையோ அல்லது எந்தத் தகவலும் அளிக்காமலோ இருந்தால் அவர் மீது அரசுப் பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அரசு ஊழியர்கள் போதிய தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக, விடுப்புக்காக விண்ணப்பிக்கும்போது, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுப்பின் அளவை ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட விடுப்பானது, விண்ணப்பத்துடன் உரிய உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். அதில் ஏதேனும் தாமதம் ஏற்படக்கூடாது.
சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஏதும் இல்லாவிட்டால், ஊதியம்-இதர படிகள் இல்லாமல் விடுப்பினை அரசு ஊழியர்களுக்கு அனுமதிக்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதில் ஏதேனும் விளக்கங்கள், தகவல்கள் தேவைப்படுமானால் அவற்றை தலைமைச் செயலகத்தில் உள்ள துறைத் தலைமை உடனடியாக அளிக்க வேண்டும்.
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அவர் தனது பணிக்காலத்தில் எடுத்த விடுப்புகள் எவ்வளவு, மீதமுள்ள விடுப்புகள் விவரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாகத் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம், ஓய்வூதியம் பெறுவதற்காக அரசு ஊழியர் அனுப்பும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.