பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? ' 104'ஐ அழைக்கும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில், வினாத்தாள் எளிதாக இருக்குமா; 'சென்டம்' வாங்குவது எப்படி? என, மாணவர்கள், '104' உதவி எண்ணை அழைத்துள்ளனர். அவர்களிடம், மனநல ஆலோசகர்கள் போனில் பேசி, அச்சத்தை போக்குகின்றனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மாணவர்களை மாநில, 'ரேங்க்,' மாவட்ட, 'ரேங்க்' எடுக்கவும், உயர்கல்வியில், இன்ஜி., மற்றும் மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் சேரும் வகையில், அதிக மதிப்பெண் பெறவும், பெற்றோர் அழுத்தம் தருவர்.

இதனால், மாணவர்கள் அதிகளவில் அச்சமடைந்து, தேர்வு முடியும் வரை பதற்றமாகவே
இருப்பர். சில நேரங்களில், சரியாக தேர்வு எழுத முடியாவிட்டால், வீட்டை விட்டு வெளியேறுவது; தற்கொலை முயற்சி என, விபரீத முடிவுகளையும் எடுப்பதுண்டு.

இந்த நிலையை மாற்றி, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, அரசு சார்பில், '104' உதவி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணுக்கு, நேற்று வரை, 3,000 பேர் போன் செய்துள்ளனர்.
அவர்களில், பெரும்பாலானோர் 'அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என, 'டிப்ஸ்' கேட்டுள்ளனர்.

சில மாணவர்கள், 'தேர்வு நேரத்தில் பயமின்றி, பதற்றமின்றி, விடைகளை உரிய நேரத்தில் எப்படி எழுதுவது?' என கேட்டுள்ளனர். சிலர், தங்களுக்கு விடைகள் தெரிந்தும், அதை தேர்வு மையத்தில் எழுத முடியவில்லை என, கூறியுள்ளனர். பெரும்பாலானோர், 'இந்த ஆண்டு வினாத்தாள் எளிதாக வருமா; அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?' என, கேட்டுள்ளனர். ஆனால், எந்தவிதமான கேள்விகள் வந்தாலும், மனநல ஆலோசகர்கள் மூலம் நம்பிக்கையான வார்த்தைகளை கூறி, மாணவர்களுக்கு, '104' குழுவினர் ஆறுதல் தருகின்றனர்.