10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று, கணிதத் தேர்வு நடந்தது; வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், வினாத்தாளில் பல்வேறு பிழைகளும், பாடத்திட்டத்துக்கு வெளியில் உள்ள கேள்விகளும் இடம்பிடித்தன. இந்த வகையில், மொத்தம், 22 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் பதிலளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இரண்டு மதிப்பெண்ணில், ஒரு வினா, பிளஸ் 1 பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால், 10ம் வகுப்புக்கு தவறாக கேட்கப்பட்டிருந்தது அதேபோல, 10 மதிப்பெண் வினா ஒன்றில், வினாவே
பிழையாக இருந்ததால், அதை புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
நேற்றைய தேர்வில், 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் கூட, 80 மதிப்பெண் தான் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிழையான வினா, பாடத்திட்டத்துக்கு வெளியே வந்த வினா உள்ளிட்டவற்றுக்கு, போனஸ் மதிப்பெண் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

புரிந்து கொள்ள முடியவில்லை

இதுகுறித்து, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலருமான பி.அன்பழகன் கூறியதாவது:
கணிதத் தேர்வில், மொத்தம், 47 வினாக்களில், 10 மதிப்பெண்களுக்கான, 47வது வினாவில், '- 6' என்பதற்கு பதில், '- b' என்ற ஆங்கில எழுத்து இடம் பெற்றதால், வினாவை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் விட்டு விட்டனர்.
அதேபோல், 34ம் வினாவில், கூட்டுத்தொடரில், 7வது உறுப்பின் என்ற வார்த்தைக்கு பதில், 7வது முறையின் என்று தவறாக இடம்பெற்றுள்ளதால், அந்த வினாவும் மாணவர்களுக்கு புரியவில்லை.
இதேபோல, 44வது கேள்வி, பாடத்திட்டத்திலோ புத்தகத்திலோ இல்லை. 26வது கேள்வியில், 'cos A+B, Sin A+B' ஆகியவற்றை கண்டறிய குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வினா, பிளஸ் 1 பாடத்திலுள்ள வினா. \
எனவே, வினாத்தாளின் குழப்பங்களுக்கு தேர்வுத்துறை பொறுப்பேற்று, போனஸ் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.