பிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், இந்த ஆண்டு கணிதம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றில், 100க்கு, 100 எடுத்தவர்களின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் மாணவர் பலர், மாநில, 'ரேங்க்' எட்டியதால், 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேர்ந்த மாணவர்களிடையே வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி
ஏற்பட்டது. அதேபோல், கல்லுாரிகளிலும், பி.காம்., 'சீட்'டுக்கு கூட்டம் அலைமோதியது.
இந்த ஆண்டு கல்லுாரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி இருந்தாலும், பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கையில், அறிவியலுக்கும் மீண்டும் அதிக மவுசு உருவாகியுள்ளது. சென்னையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 சேர, மாணவர்களின் பெற்றோர், இரவு, பகலாக காத்துக் கிடக்கின்றனர்.


அதே நேரம், நாமக்கல் பள்ளிகளைப் போல், சென்னையிலும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் வைக்கப்
படுகிறது. இந்த தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:ஏற்கனவே, 10ம் வகுப்பு முடித்து தான், பிளஸ் 1 சேர மாணவர் செல்கின்றனர். ஆனால், பள்ளிகள் தாங்களாகவே, ஒரு நுழைவுத் தேர்வை வைக்கின்றன. இதுகுறித்து அவர்களிடம் முறையிட்டால், 'தமிழக அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வை வைத்து, நாங்கள் மதிப்பிட முடியாது. எங்களின் கடினமான கேள்விகளுக்கு மாணவர் பதில் அளித்தால் மட்டுமே, அவர்களை பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற வைக்க முடியும்' என்கின்றனர். இதை, கல்வித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல், தனியார் பள்ளிகளுக்கு மறைமுக ஆதரவு தருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'பிளஸ் 2வில், 1,100க்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். எனவே, அதற்கேற்ற பயிற்சியை பெறும் மாணவர்களை மட்டுமே, எங்களால் சேர்க்க முடியும்' என்றார்.