மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்

'மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு
படுத்தியுள்ளது. இந்தியாவில், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து முடிவு செய்யும் புதிய கல்வி கொள்கை, கடைசியாக, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் வெளியிட்டார். அதன் பின் வந்த அரசுகள், அதில் மாற்றங்களை மட்டுமே செய்துள்ளன. 
கல்வித்துறை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், அதன் தரம் குறித்த விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இதையடுத்து, புதிய கல்வி கொள்கையை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதற்காக, முன்னாள், மத்திய அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி தனது 
அறிக்கையை, மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. எனினும் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டது. 'ஆன்லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என, பல தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. 
இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பரிந்துரைகளை பெறுவதாக, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்; அதன்படியே செயல்படுவோம். மாநில அரசுகளின் பரிந்துரைகள் பெற்ற பின்பே இது வெளியிடப்படும்.